பிரியமான நண்பர்களே,


கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள், உலகமனைத்திலும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்களை கிறிஸ்துவின் பக்கம் திருப்புவதற்காகவும் திரும்பினவர்களை வேதாகம சத்தியத்திற்குள் நிலைத்திருக்கச் செய்யவுமே இந்த இணைய தளத்தை ஒரு உறவுப்பாலமாக வடிவமைத்துள்ளோம். எமது சபை ஒரு தமிழ் சபை. கிறிஸ்துவை அறியாமல் பாவத்திற்குள் இருக்கும் மக்களை வெளியே கொண்டுவந்து கைகொடுக்கவும் மும்முரமாக செயல்பட்டு கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக மக்களை தயார்படுத்தவும் சகல தமிழ் கிறிஸ்தவர்களும் உதவி செய்யுங்கள்.

கிறிஸ்தவ தமிழர்களாகிய நாம் தமிழர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை சற்று நிதானித்துப் பார்க்க வேண்டும். நானும் நீங்களும் இந்தப் பணியில் சோர்ந்து இருக்க முடியாது. நீங்கள் யாவரும் வீரத்துடன் எழுந்து நிற்கவும், கிறிஸ்துவின் வருகைக்கு முன்னால் நாம் தயாராக்கபட்டு ஆத்தும ஆதாயப் பணியில் மும்முரமாக செயற்பட உங்களை தட்டி எழுப்பவே இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம்.

 

எதிர்வரும் காலங்களில் அநேக காரியங்களை இந்த இணையத்தளத்தில் சேர்த்துக்கொள்ள திட்டமிடுகின்றோம். இலங்கை, இந்தியா, போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கிறிஸ்து யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவ தமிழ் நெஞ்சங்களும் ஒன்றை மறந்து விடக்கூடாது. நமது மக்கள் சமாதானத்துடன் வாழ முடியாமல் கட்டின உடுப்புகளுடன் எஞ்சிய உறவுகளுடனும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தங்களால் இயன்றளவு ஓடுகின்றார்கள். இவர்கள் இந்த உலக வாழ்கையில் அனுபவிக்கும் துன்பங்களை நாம் மறந்துவிடப்போவதில்லை. ஆனால் இவைகளை விடவும் மிகவும் கோரமான அக்கினியில் வெந்து தங்கள் நித்திய காலத்தை நரகத்தில் செலவிடப் போகின்றவர்களை நாம் மறந்து விடக்கூடாது.

அவர்களை அந்த அக்கினிக் கடலில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காகவே இலங்கையிலிருக்கும் பொரளை பைபிள் பப்டிஸ்ட் சபை மிகவும் மும்முரமாக எல்லா சவாலுக்கு மத்தியிலும் சுவிசேஷ பணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. நாம் ஒரு நாள் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற பயத்தினாலும், மக்கள் மேல் கொண்ட அன்பினாலும் இந்தப் பணியில் நிற்கின்றோம். இதை வாசிக்கும் நீங்களும் எங்களுக்காக உதவும்படி இந்த நேரத்தில் அழைப்பை விடுக்கின்றேன். " கிறிஸ்தவர்கள் மேல் விழும் ஒவ்வொரு கல்லும் அவர்களுக்க தேவனால் ஆயத்தமாக்கபட்டுள்ள கிரீடங்களில் ஜொலிக்கும் மாணிக்க கற்களாக பதியும்" என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அந்த கிரீடங்களை பெற்றுகொள்ள நாம் முயற்சி செய்வோம்.
கிறிஸ்துவின் சேவையில் இணைந்திடுவீர்.....! கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவேற்றிடுவீர் .

கர்த்தர்தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக !

கிறிஸ்துவின் பணியில்,
பாஸ்டர் கௌரீஸ்வரன் தியாகராஜா.
bbbc@bbiblebaptist.com

 

 

 
   
 
www.bbiblebaptist.com